திருச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கருதி என்ஐஏ இரண்டு பேரை கைது செய்துள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ் நகரில் வசித்து வருபவர்கள் சர்புதீன், ஜாபர். பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் ஏற்கெனவே துபாயில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
சமீப நாட்களாக இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பான சந்தேகத்திற்கு இடமான வகையில் இணையத்தில் பதிவுகளை செய்து வந்துள்ளனர். இதை கண்காணித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை, 5 மணி அளவில், சர்புதீன், ஜாபர் தங்கியிருந்த வீட்டில், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், அவர்களது லேப்டாப், மொபைல் போன்கள், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாளை சர்புதீன், துபாய் செல்ல இருந்ததும் தெரிந்தது. இந்நிலையில் அவர்களை கைது செய்த அதிகாரிகள், திருச்சி கே.கே. நகர் காவலர் சமுதாய கூடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் இரண்டு இந்தியர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக என்ஐஏ கைது செய்தது. அவர்கள் கொடுத்த தகவலின் படி தற்போது திருச்சி வாலிபர்கள் பிடிபட்டுள்ளனர்